நல்ல தமிழ் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள்!

நல்ல தமிழ் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள்! அவனொரு தமிழன் என்றே அடையாளம் காட்டுங்கள்! 

திருமகள்

http://maavirarmann.com/news-newsid-22253.html

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் தமிழ்ப் புத்தாண்டு, தைப் பொங்கல் திருநாள், வள்ளுவர் பிறந்த நாள் விழாவின் போது தூய தமிழ்ப் பெயருடைய குழந்தைகளுக்கு 1,500 வெள்ளி பரிசாக அளித்து வருகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் கிடைக்கும் போது குடவோலை மூலம் பரிசாளிகள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
இந்த ஆண்டு (தி.ஆ.2043) நடத்தப்பட்ட போட்டிக்கு 68 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றன. அதில் 28 பெயர்களே தனித்தமிழ் வரைவிலக்கணத்துக்கு அமைய இருந்தன. எஞ்சிய பெயர்கள் வட மொழிப் பெயர்களாகவோ அல்லது பெயரில் பொருளோ, இனிமையோ இல்லாமல் இருந்தன. அந்தப் பெயர்களில் சில பின்வருமாறு.
அரிணி, ஓவியா, தாமிரன், கவிநயா, ஆரன், தணிகா, சுஜேன், அவனி, மிதுசா, மாதினி, காவியா, காவியன், தாரகன், அகரன், கவிநயன், கார்த்திபன், கவின், சங்கவி, நிவேதினி, அகிலன், ஈசன், ஆரன், புகழாளன், மாதினி, காவியா, தாரகன், கார்த்திபன், சிறிலக்ஸ்மனா, மாதுனம, அஞ்சலி, ஒவியா, செல்வாகினி, ஒளிமயன், ஆரபி, நர்த்தகி, கார்த்திகன், கங்கா, தாமிரன், கவீஸ், அரினி.
இந்தக் காலத்தில் பெரும்பான்மைத் தமிழ்ப் பெற்றோர் கிரந்த எழுத்துக்களான ஷ், ஸ், ஜ, ஹ, ஸ்ரீ இடம்பெறும் பெயர்களை விரும்பித் தங்கள் பிள்ளைகளுக்கு வைக்கிறார்கள். காரணம் அதனைப் புதினம் அல்லது நாகரிகம் என நினைக்கிறார்கள். பல பெற்றோர்களுக்கு வட மொழிப் பெயர் எது தமிழ் மொழிப் பெயர் எது என்பது தெரியாமல் இருக்கிறது. இதனால வடமொழிப் பெயர்களை தமிழ்ப் பெயர்கள் எனக் கருதி வடமொழிப் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்கு வைத்து விடுகிறார்கள்.
கஜன், டிலஷ்சனா, டிலக்க்ஷன், சாதனா, ரதிஷா, ஷாரா, ஷிரோமி, யூரேனியா, ஜெனாத், தர்ஷா, ஜசோன், ஆசா, கோசா, வவியன், லட்சிகா, நிருஜா, நிருபிகா, அபிஷா, சுஜுதா, ஜீவிதன், நிரோஜன், நிரோஜி, சுரேஷ், சுரேஷி, வர்ஷன் போன்ற பெயர்களைக் குறிப்பிடலாம்.
வடமொழியாளர் (சமற்கிருதம்) உயிரை அச்சு, சுரம் எனவும் மெய்யை அல், வியஞ்சனம் எனவும் கூறுவர். ஆரியத்திற்கும் தமிழிற்கும் பொது எழுத்தாலாகி விகாரமின்றித் தமிழில் வந்து வழங்கும் வடமொழி தற்சமம் எனப்படும். அமலம், கமலம், காரணம், குங்குமம் பொது எழுத்தாலாகிய தற்சம மொழி.
ஆரியத்திற்கே உரிய சிறப்பு எழுத்தாலும் பொதுவும் சிறப்புமாகிய ஈரெழுத்தாலுமாகித் திரிதல் முதலிய விகாரம் பெற்றுத் தமிழில் வந்து வழங்கும் வடமொழி தற்பவம் எனப்படும். சுகி, போகி, சுத்தி. இவை சிறப்பெழுத்தாலாகி விகாரம் பெற்றுத் தமிழில் வந்து வழங்கும் தற்பவ மொழி.
அரன், செபம், ஞானம், அரி. இவை பொதுவும் சிறப்புமாகிய ஈரெழுத்தாலுமாகி விகாரம் பெற்றுத் தமிழில் வந்து வழங்கும் தற்பவ மொழி. ஹரன் அரன் ஆகவும் ஜெபம் செபம் ஆகவும் ஞான் ஞானம் ஆகவும் தமிழில் வரும். (நன்னூல் - நல்லூர் ஆறுமுகநாவலர் உரை)
ஞானம் என்ற வடசொல்லுக்கு தமிழில் நேரடியான பொருள் அறிவு, ஞானி என்றால் அறிவாளி, வடமொழி தேவபாடை என்று கற்பிக்கப் படுவதால் ஞானம் என்ற சொல் மிகச் சிறந்த பொருளைத் தருவதாகத் தமிழ்மக்கள் நினைக்கிறார்கள். ஞானிகள் சொன்னார்கள், எழுதினார்கள் என்று எழுதப்பட்டதை படிக்கும் போது அதில் மிகப் பெரிய தத்துவம், புனிதம் பொதிந்திருப்பதாக தமிழர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அதையே அறிவாளிகள் சொன்னார்கள், எழுதினார்கள் என்று படித்தால் ஏதோ படித்தவர், சிந்தனை செய்பவர் எழுதி இருக்கிறார் என்ற பொருள் தருவது போல் தோன்றும். உண்மையிலேயே ஞானி என்றாலும் அறிவாளி என்றாலும் ஒரே பொருள் தான். ஆனால் தமிழர்கள் தாழ்வு மனப்பான்மை காரணமாக தங்கள் குழந்தைகளுக்கு அறிவாளி என்றோ, பேரறிவாளன் என்றோ பெயர் வைக்கப் பின்நிற்கிறார்கள்.
இதனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பொருள் மயக்கம் காரணமாக கமலம், அரன், ஞானம், அரி எனப் பெயர் வைக்கிறார்கள். அவை வடமொழிப்பெயர்களாகவே எடுத்துக் கொள்ளப்படும்.
தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் நடத்திய தூய தமிழ்ப் பெயர் போட்டியில் வெற்றி பெற்ற தூயதமிழ்ப் பெயர்கள் கனிமொழி, எல்லாளன், தமிழ், அகரன், தமிழினி, கரிகாலன், திருமகள், முகிலன், இனியவன் மற்றும் சேயோன். தூய தமிழ்ப் பெயர்களாக இருந்தும் பரிசு பெறத் தவறிய பெயர்கள் செங்கோன், தமிழ்ச்செல்வன், ஆரூரன், தாமரை, புகழாளன், ஈழன், தாயகன், இனியவன், போன்ற பெயர்கள்.
நாகரிகம் அடைந்த காலம் தொட்டு மக்கள் தாங்கள் விரும்பிய பெயர்களைப் பொருட்களுக்கும் இடங்களுக்கும் குழந்தைகளுக்கும் இட்டு வருகின்றனர்.
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தே எனத் தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார். தமிழில் பேரளவானவை காரணப் பெயர்களே. பிற்காலத்தில் காரணம் தெரியாத சொற்கள் இடுகுறிப் பெயர்கள் என அழைக்கப்பட்டன.
அந்தப் பெண்ணைப் பார்த்தால் தமிழ்ப் பெண்ணைப் போல இருக்கிறதே என்கிறோம். காரணம் என்ன? உடை, தோற்றம், சாயல் இவற்றை வைத்து அந்தப் பெண் தமிழ் பெண்ணாக இருக்கலாம் என ஊகிக்கிறோம். அந்தப் பெண்ணின் பெயர் நல்ல தமிழ்ப் பெயராக இருந்தால் அவர் தமிழ்ப் பெண்தான் என உறுதி செய்கிறோம்.
நமது மொழி, நமது உணவு, நமது உடை, நமது பழக்க வழக்கங்கள், இவையாவும் தமிழ்ப் பண்பாடு, நாகரிகம், தேசியம் இவற்றின் குறியீடுகள் ஆகும். முக்கியமாகப் பெயர்கள் தமிழர்களது தேசிய அடையாளத்தை வெளிப்படுத்தும் குறியீடுகள்.
தமிழ் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு இடும் பெயர்கள் காலத்துக்குக் காலம் மாறி வந்திருக்கின்றன. சங்க காலத்தில் பெயர்கள் தூய தமிழில் இருந்தன. பின்னர் வடமொழி ஆதிக்கத்தின் காரணமாக மன்னர்கள், புலவர்கள், குடிமக்கள், இடப்பெயர் ஆகியன ஆரியமயப் படுத்தப் பட்டன.
கரிகாலன், செங்குட்டுவன், நெடுஞ்செழியன், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்ற தூய தமிழ்ப் பெயர்கள் பின்னர் மகேந்திரவர்மன், இராஜவர்மன், இராசராசன், குலோதுங்கன், வரகுணபாண்டியன் என வடமொழிப் பெயர்கள் ஆகின.
முதுகுன்றம் - விருத்தாசலம் ஆனது. மரைக்காடு - வேதாரணியம் ஆனது. மாமல்லபுரம் மாபலிபுரம் ஆனது. மயிலாடுதுறை என்ற அழகான பெயர் மாயூரம் ஆனது. கீரிமலை நகுலேஸ்வரம் ஆனது.
சென்ற நூற்றாண்டின் நடுப் பகுதியில் பரிதிமாற்கலைஞர், மறைமலை அடிகள், பாவலரேறு புலவர் பெருஞ்சித்திரனார் போன்ற தமிழ் அறிஞர்கள் தொடக்கிய தனித் தமிழ் இயக்கம் காரணமாக வடமொழிப் பெயர்களை நீக்கித் தனித் தமிழில் பெயர்கள் வைக்கும் பழக்கம் செல்வாக்குப் பெற்றது. குழந்தைகளது பெயர்கள் மட்டும் அல்லாது வயது வந்தவர்களுடைய வடமொழிப் பெயர்களும் தமிழாக்கப்பட்டன.
சுவாமி வேதாசலம் அவர்கள் மறைமலை அடிகள் (சுவாமி - அடிகள், வேதம் - மறை, அசலம் - மலை) எனவும் சூரியநாராயண சாஸ்திரியார் பரிதிமாற் கலைஞர் (சூரியன் - பரிதி, நாராயணன் - மால், சாஸ்திரி - கலைஞர்) எனவும் நாராயணசாமி நெடுஞ்செழியன் எனவும் கிருஷ்ணன் நெடுமாறன் எனவும் சாத்தையா தமிழ்க்குடிமகன் எனவும் இராமையா அன்பழகன் எனவும் சோமசுந்தரம் மதியழகன் எனவும் தங்கள் பெயர்களைச் சங்க காலப் புலவர்கள் மன்னர்கள் பெயர்போன்று மாற்றிக் கொண்டனர்.
ஈராண்டுகளுக்கு முன்னர் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல். திருமாவளவன் தனது இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான உறுப்பினர்களது வடமொழிப் பெயர்களை நீக்கிவிட்டுத் தனித் தமிழ்ப் பெயர்களைச் சூட்டினார். தனது தந்தை இராமசாமியின் பெயரைத் தொல்காப்பியன் என மாற்றினார்.
அண்மைக் காலம்வரை திருமண அழைப்பிதழ்களில் விவாகம், சுப முகூர்த்தம், பத்திரிகை, ஸ்ரீ, வருஷம், மாஸம், தேதி, சிரஞ்சீவி, சௌபாக்கியவதி, கனிஷ்ட, சிரேஷ்ட, நிச்சயம், இஷ்டமித்திர, பந்து, ஜன சமேதராக விஜயம் செய்து தம்பதிகளை ஆசீர்வதித்து ஏகுமாறு பிரார்த்திக்கின்றேன் என்றுதான் எழுதப்பட்டது.
தனித்தமிழ் இயக்கம் காரணமாக இன்று திருமணம், நல்வேளை, அழைப்பிதழ், ஆண்டு, திங்கள், நாள், திருநிறைச் செல்வன், திருநிறைச் செல்வி, தலைமகன், தலைமகள், உற்றார் உறவினர், வந்திருந்து, மணமக்களை வாழ்த்தியருளும்படி வேண்டுகிறோம் என மாற்றப்பட்டு விட்டது.
தமிழ் பேசுவதால் மட்டும் ஒருவர் தமிழனாகி விடமுடியாது. தமிழ்நாட்டில் பிறப்பதால் மட்டும் தமிழனாகிவிடமுடியாது. தமிழ் வாழையடிவாழையாக (Heritage) வருவதனால் மட்டும் தமிழனாகிவிடமுடியாது.தமிழ் மீது பற்றுதல் வேண்டும். தமிழ் மீது தாகம் வேண்டும். அவ்வாறு இருப்பவனே தமிழன்.
அண்மைக் காலமாகத் தமிழ்ப் பெற்றோர்களிடம் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் அல்லாத பெயர்களை வைக்கும் போக்கு அதிகரித்து வருகின்றது. தலைவர்கள், புகழ் பெற்றவர்கள், குடும்பத்தின் முன்னோர்கள் பெயர் சூட்டும் வழக்கமும் அருகி வருகிறது. பேரன், பேத்தி என்று சொல்லே பெயரன் (தாத்தாவின் பெயரைக் கொண்டவன்), பெயர்த்தி என்பதால் வந்தது தானே!
தற்பொழுது தமிழர் பயன்படுத்தும் பெயர்களில் இரண்டு விழுக்காடுதானும் பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களாக இருப்பதில்லை. பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களைச் சூடிக்கொள்ளச் சொன்னால் முகஞ்சுழிப்பவர் அழகானதென எண்ணிச் சூடிக்கொள்ளும் வடமொழிப் பெயர்களின் இழிபொருளை உணர்ந்திலர்.
அபர்ணா, தூஷிகா (தூசிகா), வாசுகி, மகிஷன் (மகிசன்), சுந்தரலிங்கம் ஆகிய வடமொழிப்பெயர்கள் முறையே ஆடையற்றவள், பீளை (கண்மலம்), வந்துநுகர், எருமை, அழகிய ஆண்குறி என்னும் பொருள்படுவது காண்க.
(1) அபர்ணா என்பது பர்ணம் என்பதன் எதிர்மறை. பர்ணம் என்பது இலைதழைகளாலான ஆடையைக் குறிக்கும். எனவே அபர்ணா என்ற பெயர் ஆடையற்றவள் என்ற பொருள் தருதல் காண்க.
(2) தூஷிகை என்பது கண்ணிலிருந்து வெளிப்படும் பீளையைக் குறிக்கும். தூஷித்தல் திட்டுதலைக் குறிக்கும். தூஷணம் இழிமொழியாகும். தூஷிகை, தூஷத்தல், தூஷணம் ஆகிய சொற்கள் வழியாகவே தூஷிகா (தூசிகா) என்ற சொல் பிறக்கிறது.
(3) வாசுகி என்னும் வடசொல் வடமொழித் தொன்மங்களிற் (புராணங்களில்) கூறப்படும் பாம்பொன்றின் பெயராகும். வா என்ற தமிழ்ச்சொல்லும் நுகர் என்று பொருள் தரும் சுகி என்ற வடசொல்லும் சேர்ந்த புணர்மொழியாகவும் இதனைக் கொள்ளலாம். பெண்களை இழிவுபடுத்தும் பொருள் தருதலைக் காணலாம்.
(4) மகிஷம் என்ற சொல்லின் வழியாக வருவதே மகிஷன், மகிஷா என்ற பெயர்கள் ஆகும். மகிஷம் என்பது எருமை எனப் பொருள்படும்.
(5) லிங்கம் என்பது ஆண்குறியைக் குறிக்கும். இதனைப் பல்வேறு அடைமொழிகளுடன் சேர்த்து அழகான பெயர்களெனக் கருதித் தமிழர் தமக்கிட்டுக் கொள்கின்றனர். அமிர்தலிங்கம், சொர்ணலிங்கம், சொக்கலிங்கம், மகாலிங்கம், அன்னலிங்கம், கணேசலிங்கம் என்பன அவற்றுட் சிலவாம்.
தமிழர்களது பெயர் அவர்களது தேசிய அடையாளத்தின் குறியீடாகும். தமிழ்ப் பெயர்களைப் புறக்கணித்து விட்டு வடமொழிப் பெயர்களை வைப்பது தமிழர் பண்பாட்டைச் சீரழிப்பதாகும். தமிழ்த் தேசியத்தை சிதைப்பதாகும். தன்மானத்தையும் இனமானத்தையும் இழப்பதாகும்.
தமிழர்கள் தமிழ்மொழி பற்றிய அறியாமை காரணமாகவே வடமொழிப் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டுகிகிறார்கள். அவர்களுக்குத் தமிழின் தொன்மை, வண்மை, இளமை இனிமை, நீர்மை தெரிவதில்லை. தமிழ் எது வடமொழி எது என்பதும் அவர்களுக்குத் தெரிவதில்லை. தற்காலத் தமிழர்கள் பஞ்சாங்கம், சோதிடம், எண் சாத்திரம் பார்த்து பல்வேறு மொழிகளில் பொருள் இல்லாமலோ, தெரியாமலோ பெயரிட்டு விடுகின்றனர். இன்ன எழுத்தில் பெயர் தொடங்க வேண்டும் என்று சொல்லும் சோதிடர்கள், எண் சோதிடர்கள் மேல் மக்களுக்கு கூடி வரும் நம்பிக்கைக்கு இதற்குக் காரணம் ஆகும். இன்னும் சிலருக்குத் தங்கள் பெயர்களில் கிரந்த ஒலிகள் வரவேண்டும் என்ற தீராத மயக்கம் இருக்கிறது.
தமிழில் மொழிமுதல் வராத எழுத்துக்கள் இருக்கின்றன. ட, ண, ற, ண, ன, ர, ல, ழ, ள என்ற வரிசை எட்டும் மொழிமுதல் வாரா. ஆனால் பெற்றோர்கள் இந்த அடிப்படை இலக்கண விதியை அறியாதவராய் இந்த எழுத்துக்களை முதலாகக் கொண்ட பெயர்களை வைக்கிறார்கள்.
தமிழில் அல்லி, அருள்மொழி, அன்பரசி, கலையரசி, கோதை, நங்கை, நாமகள், நிலா, திருமகள், கலைமகள், பூமகள், தமிழ்ச்செல்வி, கோதை, பூங்கோதை, மங்கை, மலர், மலர்விழி, வள்ளி, அன்பரசன், இளங்கோ, கண்ணன், செந்தில், செந்தூரன், சேரன், பாரி, மாறன், முருகன், வேலன் போன்ற இனிமையான, அழகான, சின்னச் சின்னச் பெயர்கள் ஏராளமாக இருக்கின்றன.
தமிழ் இலக்கணப் படி ஆண்களின் பெயர்கள் "அன்" "அர்" விகுதியிலோ, �அம்� விகுதியிலோ முடிய வேண்டும். எடுத்துக்காட்டு கம்பன், வள்ளுவன், இளங்கோவன், திருமாவளவன், தொல்காப்பியன். பெண்களின் பெயர்கள் "இ" விகுதியிலோ, "ஐ" "அள்" விகுதியிலோ முடிய வேண்டும். எடுத்துக்காட்டு கண்ணகி, வாணி, குந்தவை, கோதை, கலைமகள், திருமகள், நாமகள். அப்படி முடிந்தால் சந்த இனிமை மிகும். அதேபோல முடிந்த மட்டும் பெயர்களில் வல்லின எழுத்துக்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
நாம்தான் இப்படியென்றால் தமிழ்நாட்டுத் தமிழர்கள் முக்காலே மூன்று விழுக்காடு வடமொழிப் பெயர்களையே வைத்துத் தொலைக்கிறார்கள்.
05.12.2008 தினமலர் கோவை பதிப்பில் பிறந்த நாள் வாழ்த்துப் பெற்ற குழந்தைகள் பெயர்கள்:
ஹிர்த்திக் ராஜ், பிரசன்னவர்மா, ராகுல், சம்யுக்தா, கிருத்திகாவர்ஷா, நவீன்கோபி, தாரிகா, ஹரிகிருஷ்ணன், யோகேஷ்குமார், கார்த்திகா, விஜயபாரதி, தருண், நவீன், ஹிரன்விகாஷ், சர்வேஸ்,ஸ்ரீஇமி, கார்த்திகா, நித்திலன், ரித்விக், மதன், கவுதம், வினுதர்ஷினி, முகிலா, பரத்ராம், சுமையா, பிரநீஷ், பிரகாஷ், ரஞ்சித், அமிர்வர்சினி, ரணீட்டா, உமயாள்தர்சினி, அகிலேஷ், சுவேதா, வசுந்தரா, சுபஸ்ரீ, கீர்த்தனா, ரித்திக், யோகேஸ்வரி, விகாஸ், கவின், முஹமதுஷைத், தனகவுரி, கார்த்திகாதேவி, பிரணதி, தனுஷா, அக்ஷயா, அனுகிரஹா, கீர்த்திவாசன், சுஜேஸ் கார்த்திக், பிரனேஷ், ருத்ரேஷ்பாரதி, அப்ரீன், ஹேமா, மிருதுளா, ரக்ஷனா, அனுஷ், நித்யாஸ்ரீ, ஹரிஷ், திரிஷிதா, சுருதி, நிகிதாஸ்ரீ, அகிலேஷ், சுஜன், சத்தியநாராயணன், ரிதிகா, பிரக்னா, சாமுவேல்ராஜ், சிவவிஷ்வா, ஸ்ரீஹரிணி, வைஷ்ணவி, ஸ்ரீராம், ரித்திகா, இலக்கியா, முத்துவிஷால், அருண் ஆதித்யா, விக்வின், சந்தியா, சிவராஜ், கிரண்குமார், லாவண்யா, தர்ஷினிஸ்ரீ, பர்ஷன்பானு, திவ்யா, சூர்யபிரகாஷ், கோகுல்பிரசாத், அனு, ஹரிசுதன், ஹர்ஷவர்தன், சிபு, காயத்ரி, ஓம், இந்துபிரியா, சுபஹரிணி, ரோஹித், ஸ்ரீநிதிவருணா, மணிகண்டன், பரத், சங்கமித்திரை, நேத்ரா, பாலகிருத்திக், சஞ்ஜெய் பிரணவ், அவ்வீஸ், ஹர்ஷினி, யுவநிதர்ஷனா, சிவசங்கர், ரதேஷா, ஹரினிசூர்யா, ஷியாம், பர்ஜானா, கிருஷ்ணன், பில்ஜோபினோய், தேன்மலர், பிரியதர்ஷினி, ஹரிசுதன், ஹையகிரிவி, நேத்ரா, மானஷா, கேத்ரின் சஹானா, தீபன்ஸ்ரீ, விக்னேஷ், அப்ரோஸ், தனுஷ்ராகவ், ரோஸ்மால், ஆதிஷ், ஸ்ரீஜித்குமார், ஆதிஷ், கிறிஸ் ரையன்.
இதில் தேன்மலர் என்ற ஒரு பெயர்தான் தூய தமிழ்ப்பெயர். கார்த்திகா, கார்த்திக், மணிகண்டன், கவின் ஆகிய நான்கும் தமிழாக இருக்குமோ என்று தோன்றுபவை. ஏனையவை தமிழ் இல்லை என்று உறுதியாகத் தெரியும் வடமொழிப் பெயர்கள். தினமலர் பார்ப்பனர்களால் நடத்தப்படும் நாளேடு என்பதால் அதில் பிறந்த நாள் வாழ்த்துக்கு வந்த பெயர்களில் 98 விழுக்காடு வடமொழிப் பெயர்களாக இருப்பதில் வியப்பில்லை.
தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு. எனவே, தமிழ் இறவாதிருக்க நாம் தமிழை மறவாதிருக்க வேண்டும். நம் எண்ணமும் சொல்லும் செயலும் தமிழாகத் திகழ வேண்டும். தமிழர் உலகெங்கும் முதன்மையிடம் பெற வேண்டும் எனில் தமிழ் எங்கெங்கும் தலைமையிடம் பெற வேண்டும். அதற்கு உழைப்பதே நம் ஒவ்வொருவரின் கடமை. (இலக்குவனார் திருவள்ளுவன்)
எனவே நல்ல தமிழ்ப் பெயர்களைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள் அவனொரு தமிழன் என்றே அடையாளம் காட்டுங்கள்!