தமிழில் பெயரிடுவோம்!

தமிழில் பெயரிடுவோம்!

தமிழில் பெயரிடுவோம்!  -மா. தமிழ்ப்பரிதி
“தமிழரின் தமிழ்க்குழந்தை தமிழ்ப்பெயரே பெறுதல் வேண்டும்-பாவேந்தர் பாரதிதாசன்”
வாழ்வில் தாய்மொழியில் மட்டுமே மொழிந்துயிர்க்கும் பறவை, பூச்சி, விலங்கினங்களுக்கு இக்கட்டுரைஉலகின் தொன்மையான மொழியான தமிழின் சிறப்பினை, உலகமே போற்றுகின்றது; பெருமை செய்கின்றது. ஆனால் தாய்த்தமிழகத்தில் தமிழின் மீது தமிழர் காட்டும் அக்கறை மிகுந்த கவலை தருவதாக உள்ளது. இன்றைய சூழலில் 100-க்கு 20 விழுக்காடு தமிழர்களின் பெயர் மட்டுமே தூய தமிழாய் உள்ளது.
தமிழகத்தில் பெயரளவில் தமிழ்
என கொதிக்கின்றேன்!
அடடா!
தமிழரின்
பெயரிலும் தமிழ் இல்லை!
உலகின் அனைத்து மொழியின மக்களும் தத்தமது மொழிகளில் பெயர் கொள்கின்றனர். ஆனால், தமிழர்கள் மட்டும் வடமொழியாய், அரபியாய், இலத்தீனமாய், பாரசீகமாய் பெயர் கொண்டு அடையாளம் இழக்கின்றனர். இந்த அவலநிலை இன்னும் நீடிக்கலாமா? உலக மொழிகளுக்கெல்லாம் வேர் மொழியான தமிழுக்கு அணி செய்யும் வகையில், குழந்தைகளுக்கும், நிறுவனங்களுக்கும் தமிழில் பெயர் சூட்டிட உறுதி ஏற்போம்! பிறமொழிப் பெயர்களை தமிழர்கள் சூட்டிக்கொண்டிருப்பதற்கு, பல்வேறு நம்பிக்கைகளும், மாயைகளும், மதப்பற்றுமே அடிப்படையாய் உள்ளது.
பிற நாடுகளில் எல்லாம் ஒரு குழந்தை பிறந்தவுடன், பெற்றோர்தான் குழந்தையின் பெயரினை முடிவுசெய்து, பெயர்சூட்டி மகிழ்வார்கள். ஆனால் தமிழர்கள் மட்டும் சோதிடர்கள் சொல்லும் பொருளற்ற பிறமொழிப் பெயர்களை குழந்தைகளுக்குச் சூட்டும் நிலை நிலவுகிறகிறது.
தமிழர்களின் பெயர் பெரும்பாலும் வடமொழியாய் இருப்பதற்கு சோதிடம், ஜாதகம், எண் கணியம் போன்றவை அடிப்படைகளாக உள்ளன.
ஒரு குழந்தை பிறந்தவுடன் ஓரைகளின் (நட்சத்திரங்களின்) அடிப்படையில் சோதிடர்கள் பெயர்களை சொல்கின்றனர். பெற்றோர்களும் அப்பெயர்களை தமிழா? பிறமொழியா? என்றெல்லாம் ஆராயாமல், குழந்தைகளுக்குச் சூட்டிவிடுகின்றனர்.
தமிழில் எந்த எழுத்துக்களில் எல்லாம் பெயர் தொடங்காதோ, அந்த எழுத்துக்களையே சோதிடர்கள் சொல்கின்றனர். அவர்கள் சொல்லும் எழுத்தின் அடிப்படையிலான பெயர்கள் வேற்றுமொழி என்பதைக்கூட தமிழர்கள் அறியாமல், அப்படியே ஏற்கின்றனர். வடமொழியின் ஓரைப்பலனெல்லாம் (நட்சத்திரப்பலனெல்லாம்) நமக்கு எப்படிப் பொருந்தும் என சிந்திப்போம்!
நட்சத்திரப் பலனுக்கு அடுத்தபடியாக எண் கணியத்தின் (எண் சோதிடம்) அடிப்படையில், நெடுங்காலமாய் நல்ல தமிழ்ப்பெயரோடு இருப்பவர்கள்கூட, தங்களின் பெயரினை பொருளற்ற பிறமொழியில் மாற்றிக்கொள்கின்றனர். பெயரின் பொருளும், அதன் எண்களுக்குமான கூட்டுத்தொகையும் வாழ்வை மாற்றுமெனும் நம்பிக்கைகள் உழைக்காமலே உயர்வு எனும் சோம்பல் வாழ்க்கைக்கு அடித்தளமிடுகின்றது.
வாழ்க்கை மேம்பாடு உழைப்பால் மட்டுமே அடையக்கூடிய ஒன்றென்பதை மறந்து, சோதிடத்தின் அடிப்படையில் வைத்துக்கொள்ளப்படும் பிறமொழிப்பெயரால் மட்டுமே விளையும் எனும் நம்பிக்கையில் மக்கள் சோம்பலாகிப் போகின்றனர். தம் தாய்மொழியினையும் அழிக்கின்றனர்.
எண் சோதிடத்தின் அடிப்படையில் பெயரினை மாற்றிக்கொள்வதை ஓர் இயல்பான பழக்கமாகவே கொண்டுள்ளார் என் நண்பர் ஒருவர். அதாவது, ஒரு ஆண்டிலேயே நான்கு முறை பெயரினை மாற்றிக்கொண்டுள்ளார். பிறமொழிப் பெயர் மாற்றங்கள் அவர் வாழ்வில் யாதொரு மாற்றத்தினையும் ஏற்படுத்திவிடவில்லை. அதற்கு மாறாக, பெயர் மாறியும் வாழ்க்கை மாறவில்லையே என்று மன உளைச்சலையும், கடன் சுமையையும் அவர் பெற்றதுதான் மிச்சம்.
அந்த நண்பருக்கு பெயர் தமிழில்தான் இருந்தது; தமிழில்தான் கையொப்பம் இடுவார். ஆனால் அவர் அண்மைக்காலமாக, அவர் ஆங்கிலத்திலேயே கையொப்பமிட்டு வருகின்றார். ஏனென்று கேட்டால், “ஆங்கிலத்தில் என் பெயரினை எழுதினால்தான் எழுத்து மதிப்பு சரியாக வருகிறது” என்றார். ஆங்கில வகை எழுத்து மதிப்பு தமிழரின் வாழ்வினை மாற்றும் என்ற பொருளற்ற நம்பிக்கை, தமிழின் பண்பாட்டுச்சுவடுகளை அழிப்பதாக உள்ளது.
பொருளற்ற எந்தச் சொல்லையும் தமிழ் தன்னகத்தே கொண்டதில்லை. தமிழ்ச்சொல் என்றால் கண்டிப்பாக அதற்கொரு வேர் இருக்கும்; பொருள் இருக்கும். ஒரு பெயர் ஒருவருக்கு ஊக்கமளிப்பதாக இருக்க வேண்டுமே தவிர, மன உளைச்சலை ஏற்படுத்துவதா இருக்கக்கூடாது. எண் சோதிடத்தின் அடிப்படையில் பெயர் வைத்துக் கொள்பவர்களும், பெயரினை மாற்றிக் கொள்பவர்களும் தங்கள் வாழ்வின்வெற்றித் தோல்விகளை எப்போதும், தங்களின் பெயருடனேயே பொருத்திப் பார்க்கின்றனர். வெற்றி என்றால் பெயரின் மாற்றத்தால் ஏற்பட்டதென்றும், தோல்வி என்றால் இராசியற்ற பெயரென்றும் புலம்பிதன்னம்பிக்கை இழந்து கொண்டே மீண்டும் தொடங்குகின்றனர், அவர்களின் பெயர் மாற்றும் படலத்தை.
ஜப்பானில் வாழும் ஒருவரின் பெயர், கையொப்பம், தலைப்பெழுத்து அனைத்துமே ஜப்பானிய மொழியில்தான் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் பெரும்பான்மையான தமிழரின் பெயர் வடமொழியாக, கையொப்பமும் தலைப்பெழுத்தும் ஆங்கிலமாக உள்ளது .
ஏனிந்த அவல நிலை? இந்தநிலை தொடர வேண்டுமா?
மூதாதையரின் பெயரினையும் குல தெய்வத்தின் பெயரினையும் தலைமுறை தலைமுறையாக சூடிக்கொள்ளும் பழக்கம் தமிழரிடையே இருந்து வருகின்றது. தாத்தாவின் பெயரினைப் பேரனுக்கும், பாட்டியின் பெயரினை பேத்திக்கும் சூட்டும் மரபே இங்கு உள்ளது. ஆனால், இன்றைய சூழலில் நாம் நடிக, நடிகையரின் பொருளற்ற பிறமொழிப் பெயர்களை பிள்ளைகளுக்குச் சூட்டி தமிழின் இருப்பை தொலைக்கின்றோம்.
பெயரில் என்ன இருக்கின்றது? என்பார் சிலர். பெயர் தானே முகவரி.
மு.Muththu என்பதை தவறென உணரும் தமிழர் M.முத்து என்பதை தவறென அறியாமல் எழுதுகின்றார். பிறமொழிக்காரர்கள் எவரும் தமிழில் பெயர் கொள்வதில்லை. நாம் ஏன் பிறமொழிப் பெயரினை சுமக்க வேண்டும்.
தமிழ் நாட்டின் கடைவீதியில் நுழைந்தால், நாம் ஏதோ அமெரிக்கா அல்லது இங்கிலாந்தின் கடைவீதியில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. அனைத்து வணிக, நிறுவனப் பெயர்களும் ஆங்கிலமாகவே உள்ளது. ஏனிந்த மெத்தனப்போக்கு.
Tea Stall என்பதை ‘தேநீரகம்’ என எழுத என்ன தடங்கல்? சிந்திப்போம்! ஒரு மொழியின் வளர்ச்சிக்கு அரசின் ஆதரவு கண்டிப்பாக வேண்டும். அரசு ஆதரிக்கும் மொழிதான் வாழும், வளரும். முற்காலச் சோழர்களின் பெயர்கள் தூய தமிழிலூம், பிற்கால சோழர்களின் பெயர்கள் வடமொழியிலும் இருந்தது நமக்கு மொழி வல்லாண்மையின் தன்மையினை தெளிவாக உணர்த்துகிறது.
தமிழ் அனைத்து நிலைகளிலும் ஆட்சிபெறவேண்டும் என முழங்கிய தமிழ்க் குடும்பங்களின் இரண்டாம் தலைமுறையிலேயே தமிழின் பயன்பாடு எதிர்திசையில் செல்வதை கண்கூடாகக் காண்கின்றோம். உழைப்பும், அறிவும் மாந்தநேய உணர்வும்தான் ஒரு சமூகத்தினை நிலை நிறுத்தும். நம் தமிழின் வளங்களைப் பயன்படுத்துவோம்! பண்படுத்துவோம்! பாதுகாப்போம்!
மொழி, பண்பாடு, வாழ்வியல் என அனைத்திலுமாய் இழக்கும் தமிழரின் வாழ்வை மீட்க, தமிழ்ப் பெயர்களிலிருந்து தொடங்க, தூய தமிழ்ப் பெயர்களை உங்கள் குழந்தைகளுக்கும், நிறுவனங்களுக்கும் சூட்டி தமிழ், தமிழரின் மரபினைக் காக்க உறுதி ஏற்போம். தமிழ் வாழ தமிழன் வாழ்வான்.
“தாய்மொழியினை மதித்து வீழ்ந்த நாடுமில்லை
தாய்மொழியினை மிதித்து வாழ்ந்த நாடுமில்லை”
-மா. தமிழ்ப்பரிதி