நல்ல தமிழ்ப் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள் நானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள்

செந்தமிழில் பெயரிடுவோம்
நல்ல தமிழ்ப் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள்
நானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள்
                                                                                            -கவிமணி ந.மா.முத்துக்கூத்தன்

தமிழ் தமிழனின் அடையாளம்.. எனவே, தமிழர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளுக்குத் தாய்த் தமிழில் பெயர் சூட்ட வேண்டும். பல்லாயிரக்கணக்கில் நல்ல தமிழ்ப்பெயர்கள் இருக்கும்போது அவற்றைத் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டாமல் ஆரிய மொழிப்பெயர்களைச் சூட்டுவது தமிழன் தன் அடையாளத்தை இழக்கச் செய்யும் செயலாகும்.... ஸ்ருதி . ஸ்வேதா , , ஆதர்ஷ் ரமேஷ், சுரேஷ், காமேஷ் என்றெல்லம் நம் தமிழர்கள் ஆரியமொழிப் பெயர்களைத் தங்கள் பிள்ளிகளுக்குச் சூட்டுகின்றனர். ஆனால், எந்த வடநாட்டானாவது செழியன் ,அன்பழகன் , மணிமாறன் , கயல்விழி , தேன்மொழி , கலையரசி என்பன போன்ற தனித்தமிழ்ப் பெயர்களைச் சூடிக்கொள்கிறானா? இல்லையே ! பிறகு நாம் மட்டும் ஏன் அவர்கள் மொழிச்சொற்களை வலிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.? நம்மை யாரென்று அடையாளங்காட்ட முடியாத அயல்மொழிப் பெயர்களை நாம் இடுவது மிகப்பெரிய இழுக்காகும். 



கவர்ச்சியான - அழகான - இனிமையான பெயர்கள் எனக் கருதிக்கொண்டு பொருளற்ற பெயர்களையோ அறுவறுப்பான பொருளுடைய பெயர்களையோ தங்கள் பிள்ளைகளுக்குச் சூடி பெருமைபட்டுக் கொள்கின்றனர். அபர்ணா (ஆடையற்றவள்) வாசுகி (வந்து இன்பம் நுகர்) தூஷிகா (பீளை), கேசவன் (மயிரான்) மகிஷன் (எருமை,) சுந்தரலிங்கம் (அழகிய ஆண்குறி) அமிர்தலிங்கம் (சுவையான ஆண்லிங்கம்) போன்ற வடமொழிப்பெயர்களின் இழிபொருளை உணர்ந்தால் யாராவது அத்தகைய பெயர்களைத் தங்கள் பிள்ளைகளூக்குச் சூடுவார்களா?



கவிமணி ந.மா.முத்துக்கூத்தன் அவர்களின் , “நல்ல தமிழ்ப் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள் நானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள்” என்ற பாவரிகளை நம் தமிழ்நெஞ்சங்களில் பதிப்போம். தமிழ்ப்பெயர்களைப் பரப்புவோம். தமிழர் பெயரெல்லாம் தமிழ்ப்பெயராகட்டும்.. 

செந்தமிழில் பெயரிடுவோம் என்ற என் பதிவுகளையும் தமிழ்ப்பெயர் தொடர்பான இணைப்புகளையும் விரும்பிப் போற்றிய அனைத்து முகநூல் தமிழ்நெஞ்சங்களுக்கும் நன்றி. வேற்றுமொழிப் பெயர்களைத் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டுவதே அழகு என்றும் இனிமை என்றும் பெருமை என்றும் கருதும் பெற்றோர்கள் நடுவில் தங்கள் பிள்ளைகளுக்குத் தாய்த்தமிழ்ப்பெயர்களைச் சூட்டி மகிழும் மொழியின உணர்வு மிக்க பெற்றோர்கள் பாராட்டுக்குரியவர்கள். மொழியின உணர்வு மிக்க பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தாய்த் தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவதோடு மற்றவர்களையும் அவ்வாறு செய்யுமாறு பரப்பியம் மேற்கொள்ளுதல் தமிழர்தம் கடமையாகும். இராமநாதன் என்ற முகநூல் அன்பர் தம் பெயரை இளமாறன் என்று மாற்றிக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். அவருக்கு நம் வாழ்த்துகள்.

செந்தமிழ்ச்செல்வங்கள் என்ற தலைப்பில் தமிழ்ப்பெயர் கொண்ட சிலரைப் பற்றிய விவரங்களைப் பதிவுசெய்துள்ளேன், தமிழ்ப்பெயர் கொண்ட மற்றவர்களும் தமிழ்ப்பெயரைப் புனைபெயராக மாற்றிகொண்டவர்களும் புகைப்படத்துடன் விவரம் தெரிவித்தால் அவை செந்தமிழ்ச்செல்வங்கள் என்ற தலைப்பில் முகநூலில் தொடர்ந்து பதிவு செய்யப்படும் . இது மற்றவர்களும் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ்ப்பெயர் சூட்ட ஊக்கம் ஊட்டுவதாக அமையும்..
நன்றி.

அன்புடன்
மு.திருவேங்கடம்